உணவே மருந்து என்ற தாரக மந்திரத்திற்கு இயற்கை முக்கியக் காரணமாக உள்ளது. தமிழர்களின் உணவு பழக்க வழக்கம் பெரும்பாலும் நோய்த் தீர்க்கும் மருந்தாகவே உள்ளது.
அந்த வகையில் அவகோடா பழம் அதீத மருத்துவ குணங்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருப்பதால் மருத்துவர்களால் பொதுமக்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நடுப்பகுதியில் மட்டுமே அவகோடா பழம் விளைகிறது. குறிப்பாக கொடைக்கானல், ஊட்டி சுற்றுவட்டார கிராம விவசாயிகள் அவகோடா பழத்தை அதிகளவு சாகுபடி செய்து வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் அவகோடா பழம் விற்பனை செய்து அசத்தும் மென்பொருள் பொறியாளர் தற்போது கரோனா தொற்று பரவி வரும் நிலையில் மனிதர்களுக்கு அவகோடா பழம் அத்தியாவசியமானதாக மாறிவிட்டது. கரோனா ஊரடங்கு காரணமாக அவகோடா பழம் வியாபாரம் சரிவை சந்தித்தது. இருப்பினும் அதனை வியாபாரம் செய்ய திருச்சியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் மனோஜ் தர்மா, இவரது நண்பரான புகைப்பட கலைஞர் சகாயராஜ் ஆகியோருக்கு அருமையான யோசனை ஒன்று தோன்றியது.
கரோனா காலத்தில் வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு அவகோடா பழத்தை வீடு வீடாக சென்று கொடுக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து நண்பர்கள் மூலம் கொடைக்கானல் பகுதியில் உள்ள விவசாயிகளை தொடர்பு கொண்டு அவகோடா பழத்தை கொள்முதல் செய்தனர். வாட்ஸ் அப் (99019 65430), பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் கிலோ 150 ரூபாய்க்கு வீடு தேடி வரும் என்று விளம்பரம் செய்தனர்.
இதன் மருத்துவ குணத்தை அறிந்திருந்த மருத்துவர்கள் அதிகளவில் இவர்களை தொடர்பு கொண்டு அவகோடா பழத்தை வாங்கத் தொடங்கினர். மேலும், மருத்துவர்கள் பலரும் நோயாளிகளுக்கு இந்த பழத்தை பரிந்துரை செய்தததால் அவகோடா பழத்திற்கான தேவை அதிகரித்தது. ஆரம்பத்தில் 300 கிலோவில் தொடங்கிய விற்பனை 2 மாதங்களில் 900 கிலோ வரை விற்பனையானது. வெளிச்சந்தையில் அவகோடா பழம் கிலோ ரூ. 200 முதல் ரூ. 350 வரை விற்பனையாகிறது.
இதுகுறித்து மென்பொருள் பொறியாளர் மனோஜ் தர்மா கூறுகையில், "கரோனா ஊரடங்கு காரணமாக பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக விவசாயம் அதிகளவில் பாதித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பலதரப்பட்ட விவசாயிகள் அவகோடா பழம் சாகுபடி செய்து வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் சாகுபடி செய்த பழங்கள் காய்ந்து வீணாகியது. இந்த செய்தியை நாங்கள் அறிந்தவுடன் விவசாயிகளை நேரடியாக தொடர்புக் கொண்டு அவகோடா பழங்களை வாங்கி குறைந்த விலைக்கு திருச்சி மக்களுக்கு டோர் டெலிவரி மூலம் விற்பனை செய்து வருகிறோம்.
இந்தப் பழத்தில் பல வைட்டமின் சத்துகள் இருக்கின்றன. அதனால் தற்போதைய கரோனா காலத்தில் பல மருத்துவர்கள் தங்களது நோயாளிகளுக்கு அவகோடா பழத்தை பரிந்துரை செய்கிறார்கள். முதலில் 300 கிலோ கொள்முதல் செய்தோம். அடுத்து 600 கிலோ கொள்முதல் செய்தோம். அடுத்து 900 கிலோ கொள்முதல் செய்தோம். தற்போது ஆர்டர் அதிகரித்துள்ளது. அதனால் வரும் வாரங்களில் இன்னும் கூடுதலாக கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளோம். தற்போது விற்பனை திருச்சியில் மட்டுமே நடைபெறுகிறது. மற்ற ஊர்களில் இருந்து ஆர்டர் வருகிறது. வரும் காலத்தில் கூரியர் மூலம் அவகோடா பழம் டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளோம்" என்றார்.
அவகோடா பழம் வாங்கும் வாடிக்கையாளரான இல்லத்தரசி வசுந்தரா கூறுகையில், "அவகோடா பழம் திருச்சியில் கிடைக்காது. மலைப் பிரதேசங்களில் மட்டும் தான் கிடைக்கும். இந்தப் பழத்தை விவசாயிகளிடம் இருந்து வாங்கி நேரடியாக வீட்டிற்கே வந்து இளைஞர்கள் வழங்குகின்றனர். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கால்சியம், மெக்னிஷியம் போன்ற அதிக சத்துக்கள் இதில் உள்ளன.
பழத்தை கொண்டு சாலட் தயாரிக்கலாம். சப்பாத்தி மாவில் கலந்து சமைக்கலாம். மில்க் ஷேக் தயாரித்தும் பருகலாம். தற்போதைய கரோனா காலத்தில் மார்க்கெட்டிற்கு நேரடியாக சென்று வாங்குவது கடினம். எனது நண்பர்கள் பலரும் இதை வாங்கியுள்ளனர். பழம் நல்ல முறையில் இருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: சிறுதானிய சாகுபடியை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் 'பாமரர் ஆட்சியியல் கூடம்'