திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. அந்த விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை கடத்தி வருவதும், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நேற்று திருச்சி வந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், சட்ட விரோதமாக நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, அவர் தனது ஆசனவாயில் மறைத்து 995.5 கிராம் தங்கத்தை எடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சுமார் 60 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பேண்ட்டில் மறைத்து கடத்தி வரப்பட்ட 47 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 700 கிராம் தங்க பிஸ்கட் மற்றும் 94 கிராம் தங்க நகைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.