திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையம், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த படியாக 2-வது மிகப்பெரிய விமான நிலையம் ஆகும். திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை கடத்தி வருவதும், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று (ஆகஸ்ட் 9ஆம் தேதி) காலை மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்ல ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது.
அப்போது வழக்கம் போல விமான நிலைய மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது, திருச்சியை சேர்ந்த ராம்பிரபு என்ற பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பயணியை, விமான நிலைய மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில், பயணி ராம்பிரபு தனது உடல், உள்ளாடை, மொபைல், பர்ஸ் மற்றும் கால் பாதத்திற்கு அடியில் என மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் சவுதி ரியால் இருந்தது தெரிய வந்தது. அதாவது அதன் இந்திய மதிப்பு ரூ.23 லட்சத்து 11 ஆயிரம் ஆகும். பின்னர் அந்த பயணியை அதிகாரிகள் விசாரித்த போது, சவூதி ரியாலை சட்ட விரோதமாக மலேசியாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.