திருச்சி பள்ளக்காடு தோகைமலை மெயின் ரோடு பகுதியைச்சேர்ந்தவர், முத்துக்குமார் என்பவரின் மகன் ஆகாஷ் என்கிற செல்லா மாரி (19). இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தாயனூர் கிராமத்தைச் சேர்ந்த அகிலா (21) என்பவரை ஆகாஷ் காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது அகிலா 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இந்நிலையில் சோமரசம்பேட்டை தாயனூர் பகுதியில் உள்ள வயல் வெளியில் ஆகாஷ் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோமரசம்பேட்டை காவல் துறையினர், ஆகாஷின் சடலத்தைக் கைப்பற்றினர்.
அப்போது, ஆகாஷின் உடலில் நெற்றி, கழுத்து மற்றும் உச்சந்தலை ஆகியப் பகுதிகளில் கத்திக்குத்துடன் கூடிய காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இளைஞர் உயிரிழந்துகிடந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.