திருச்சி:சிலம்பத்தில் பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்திய திருச்சி பள்ளி மாணவி சுகித்தா, சிலம்ப போட்டிகளில் கிடைத்த பரிசுத்தொகையை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சாலையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆடை மற்றும் இனிப்பு வழங்கிய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை (நவ.12) உலகெங்கும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், திருச்சி மாநகரில் உள்ள என்.எஸ்.பி.ரோடு, சிங்காரத்தோப்பு என பல்வேறு வணிகப் பகுதிகளில் ஆடை, இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட பொருள்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் வாங்கி, பண்டிகையைக் கொண்டாடக் கனவுகளுடன் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலர் காத்திருந்தாலும், தீபாவளியின் போது புத்தாடைகள், பட்டாசு வாங்க முடியாமல் ஏங்கும், ஆதரவற்ற மற்றும் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளும் உள்ளன.
"இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கு" என்ற நோக்கில், தமிழர்களின் பாரம்பரிய சிலம்பத்தில் பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்திய திருச்சி மாநகர் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த, செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவி சுகித்தா, தீபாவளி பண்டிகையைக் கொண்டாட இயலாத மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சாலையோர நடைபாதைகளில் வசித்து வரும் முதியோர்களுக்கு, சிலம்ப போட்டிகளில் கிடைத்த பரிசுத்தொகை மற்றும் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு சேலை, வேட்டி, துண்டு மற்றும் இனிப்பு வகைகளுடன் 100 ரூபாய் பணமும் வழங்கி தீபாவளியை மனநிறைவுடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்.