திருச்சி மாவட்ட அரசு தலைமை சித்த மருத்துவமனையில் சித்த மருந்துகள், மூலிகைகள், ஆரோக்கிய உணவு வகைகள், கீரை, பழங்கல் அடங்கிய கண்காட்சி இந்திய மருத்துவம், ஓமியோபதித்துறை சார்பில் இன்று நடைபெற்றது.
‘யாக்கை 2019’ எனும் பெயரிடப்பட்ட இக்கண்காட்சியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும், இலவச சித்த மருத்துவ முகாமும் நடைபெற்றது. இதில் பலதரப்பட்ட மூலிகைகள், சித்த மருந்துகள் காட்சிக்காக வைக்கப்பட்டன. இதற்காக 50 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று தொடங்கிய இக்கண்காட்சி அடுத்த நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது.
ஏராளமான மக்கள் இக்கண்காட்சியை பார்வையிட்டும், சித்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டும் பயனடைந்து வருகின்றனர். கண்காட்சியை திருச்சி கிஆபெ விசுவாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்ரா தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ், சித்த மருத்துவர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர். இதுகுறித்து காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நமது பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்தும் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.
யாக்கை 2019 சித்த மருத்துவ முகாம், கண்காட்சி மூலிகைகள், மருந்து மூலப்பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. சித்த மருத்துவத்தைப் பின்பற்ற மக்கள் அஞ்சுகின்றனர். சித்த மருத்துவத்தில் மருந்து, மாத்திரைகள் கிடையாது. உணவு பொருட்கள், மூலிகை பொருட்கள் மூலமாக சித்த மருந்துகளாக பயன்படுத்தப்படுகிறது.
சுமார் 4,448க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் கண்காட்சி நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் இக்கண்காட்சி முதன் முதலாக திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பாரம்பரிய மருத்துவர்களை அங்கீகரிக்க வேண்டும் - சித்த மருத்துவர்கள் வலியுறுத்தல்!