திருச்சி:தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும், போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார்.
அந்த வகையில், போதைப் பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிடும் நோக்கில், காவல் துறையினரும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் அவ்வப்போது பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (நவ.27) திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி தலைமையில் காவல்துறை அதிகாரிகளும், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் உணவு பாதுகாப்புத் துறையினரும் இணைந்து திருச்சி மாநகரில் பல இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது, காந்தி மார்க்கெட் தஞ்சை சாலை பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்ததையடுத்து, கடையில் இருந்த குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, மாநகர காவல் துறை ஆணையர் காமினி முன்னிலையில் அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.