திருச்சி:லால்குடி, அரியூர் பகுதியைச் சேர்ந்த பிரபு-மெர்சி தம்தியினர், வழக்கறிஞர்களாகப் பணியாற்றி வந்தனர். பின், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், பிரபுவின் அலுவகலத்திற்கு அவரை ஒரு வழக்கு தொடர்பாக, திருவெறும்பூரைச் சேர்ந்த சண்முகவள்ளி என்பவர் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். தொடர்ந்து, அவ்விருவருக்கும் இடையே ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவினால் இருவரும் சில காலமாக ஒன்றாக வசிப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, லால்குடி அடுத்த அன்பில் மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த ஜானகி(32) என்ற பெண் பிரபுவின் அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் பல ஆண்களுடன் தகாத உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இவர் தான் கர்ப்பம் தரித்துள்ளதாகவும், 7 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும், என்ன செய்வது? எனத் தெரியவில்லை எனவும் கடந்த ஜூலை மாதத்தில் வழக்கறிஞர் பிரபுவிடம் தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்ட பிரபுவும், ஜானகியிடம் 'குழந்தைப் பிறக்கட்டும் பார்த்துக் கொள்வோம்' என்று கூறியுள்ளார். இதனிடையே, ஜானகிக்கு பெண் குழந்தை பிறந்தால் ரூ.3.5 லட்சம், ஆண் குழந்தை பிறந்தால் ரூ.5 லட்சம் என குழந்தை பிறப்பதற்கு முன்னாகவே சட்டவிரோதமாக குழந்தையை விற்பதற்கு ஜானகிக்கு தெரியாமல் திட்டம் தீட்டியுள்ளனர்.
தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் ஜானகி, பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அப்பெண்ணின் கணவர் யார்? எனத் தெரிவிக்காததால் அப்பெண்ணை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவருக்கு செப்டம்பர் 17ஆம் தேதி பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, மருத்துவர்கள் 'உன் கணவர் எங்கே?' எனக் கேட்டுள்ளனர். அதற்குப் பதிலளிக்காத நிலையில், மருத்துவமனை தரப்பில் சைல்டு லைன் எண்ணுக்கு தொடர்புகொண்டு, ஜானகிக்கு இவ்வாறு நடந்தவைக் குறித்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, மருத்துவமனை நிர்வாகத்தின் இச்செயலைக் கண்ட வழக்கறிஞர் பிரபு - சண்முகவள்ளி தம்பதியினர், ஜானகி மற்றும் அவரது குழந்தையை தூக்கிக்கொண்டு தலைமறைவாகினர்.
பிறந்து 10 நாட்களே ஆன, பச்சிளம் பெண் குழந்தையை அதன் தாயார் ஜானகி, வழக்கறிஞர் பிரபு-சண்முகவள்ளி ஆகியோருடன் இணைந்து நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவில் ரயில்வே மேம்பாலம் அருகில் கடந்த 23ஆம் தேதி சென்று விற்பதற்காக காரில் சென்றுள்ளனர். உடன் தாயார் ஜானகியும் இருந்துள்ளார். அங்கு இருந்த சிலரிடம் பச்சிளம் குழந்தையை இரக்கமில்லாமல், ரூ.1 லட்சத்திற்கு விற்றுவிட்டு ஜானகிக்கு ரூ.80 ஆயிரமும், வழக்கறிஞருக்கு ரூ.20 ஆயிரமும் என பிரித்துக்கொண்டனர்.
இதற்கிடையே குழந்தையை பல லட்சங்களுக்கு விற்பனை செய்ததாக தெரிந்துகொண்ட குழந்தையின் தாயார் ஜானகி, தனது குழந்தையை கடத்திவிட்டதாக லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அப்புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கடந்த அக்டோபர் மாதம் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தன் குழந்தையைக் காணவில்லை எனவும், இதற்கு காரணம் வழக்கறிஞர் பிரபு-சண்முகவள்ளி தம்பதியினர் தான் எனவும் புகார் அளித்துள்ளார்.