திருச்சி விமான நிலையத்தில் சானிடரி நாப்கினில் கடத்தி வரப்பட்ட 612 கிராம் தங்கம் பறிமுதல் திருச்சி:திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையம் தமிழகத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமாகும். இங்கிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கம், கரன்சி நோட்டுகள் மற்றும் உயிரினங்களான பறவைகள் மற்றும் பாம்புகள் போன்றவைகளை கடத்தி வருவதும், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று (அக்.21) கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானம் வந்தது. விமானத்தில் வரும் பயணி ஒருவர், நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இச்சோதனையில், பெண் பயணி ஒருவர் சானிடரி நாப்கினில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் பாக்கெட்டுகளில் அடைத்து, மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பெண் பயணியை கைது செய்து அவரிடம் இருந்து 37 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 612 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இவர் எந்த நோக்கத்திற்காக தங்கத்தை சட்ட விரோதமாக கடத்தி வந்தார்? அவரது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா? வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளதா? இவர் எத்தனை முறை விமானத்தில் வெளிநாடு சென்று வந்துள்ளார் என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரம்; தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்.. பின்னணி என்ன?