தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சிக்கு வருகைதரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

PM Modi Trichy Visit: திருச்சி சர்வதேச விமான நிலையத்தை தரம் உயர்த்தி புதிதாக கட்டப்பட்ட விமான நிலைய முனையத்தின் திறப்பு விழாவிற்கு, பிரதமர் மோடி வருவதையொட்டி திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

PM Modi Trichy Visit
திருச்சிக்கு வருகைதரும் பிரதமர் மோடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 4:53 PM IST

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தை தரம் உயர்த்தி புதிய விமான நிலைய முனையம் கட்ட இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்து, 2019ஆம் ஆண்டு முதல் கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

இவ்வாறு திருச்சியில் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்டு பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய விமான முனையம் திறப்பு விழா, நாளை மறுநாள் (ஜன.2) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய முனையத்தைத் திறந்து வைப்பதுடன், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, அன்றைய தினமே நடைபெறவிருக்கும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டெல்லியிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு ஜனவரி 2ஆம் தேதி காலை 10 மணிக்கு தனி விமானத்தில் பிரதமர் மோடி வருகிறார். புதிய விமான முனையத்தில் வந்திறங்கும் பிரதமர் மோடி, முக்கிய பிரமுகர்களுக்கான தனிப்பாதை வழியாக, அங்கிருந்து காரில் புறப்பட்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு காலை 10.30 மணிக்கு செல்கிறார்.

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர், மாணவர்களுக்குப் பட்டம் வழங்கி பேசுகிறார். இதன் பின்னர், அங்கிருந்து 11.45 மணிக்கு புறப்பட்டு, 12 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வருகிறார். இதைத் தொடர்ந்து, அங்கு நடைபெறும் விழாவில் ரூ.1,200 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

அப்போது புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார். விழா முடிந்ததும், மதியம் 1.05 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சியிலிருந்து புறப்பட்டுச் செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையால் திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி டிவிஎஸ் சுங்கச்சாவடி முதல், விமானம் நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 8,000 போலீசார் பணியமர்த்த உள்ளனர். மேலும், விமான நிலையத்தின் உட்புறத்தில் மத்திய பாதுகாப்புப் படையினர் சுமார் 100 பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இதற்கிடையே, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி) அதிகாரிகள் 30 பேர் திருச்சி வந்துள்ளனர். அவர்கள் விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பிரதமர் வரும்போது பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். தற்போது திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இரு இடங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழா நடைபெறும் தினத்தன்று, 5 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையம் அருகே உள்ள வீடுகள், பணியாற்றுபவர்களின் ஒட்டு மொத்த விவரங்களையும் காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

இதுமட்டுமல்லாது, விமான நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:போலி பாஸ்போர்ட்: வங்கதேச இளம்பெண் சென்னையில் கைது.. மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details