திருச்சி: தமிழ்நாடு அரசு 161வது சட்டப்பிரிவை பயன்படுத்தி முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி திருச்சி தெற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மரக்கடை பகுதியில் நேற்று கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது மற்றும் திருச்சி மண்டல தலைவர் ஹஸ்ஸான் பைஜி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
எஸ்டிபிஐ கட்சி மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நீண்ட நாட்களாக தமிழ்நாட்டு சிறைச் சாலையில் இருக்கும் முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை தமிழ்நாடு அரசு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.
முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை என்பது நீண்ட நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பேசக்கூடிய விஷயமாக உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்ட பிறகு முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் எந்த சட்ட விதிகளையும் காரணம் சொல்லாமல் முதலமைச்சரின் நேரடி அனுமதியில் விடுதலைக்கான அனைத்து ஆயத்த வேலைகளை செய்ய முடியும் என்கிற சூழல் உள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் காலம் தாழ்த்துவதாக எங்களுக்கு தோன்றுகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநாட்டில் சிறைவாசிகள் விடுதலை குறித்து முன் வைக்கப்பட்ட தீர்மானத்தில் கூட முதலமைச்சர், ஆதிநாதன் குழுவை விரைவாக ஆளுநருக்கு அனுப்புவோம்; இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என சொல்கிறார்.