திருச்சி:எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (மார்ச்.1) திருச்சி பாலக்கரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து எஸ்டிபிஐ கட்சி செயற்குழு மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த நெல்லை முபாரக் கூறுகையில், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 1 மாநகராட்சி, 17 பேரூராட்சி, 8 நகராட்சி வார்டுகளில் எஸ்டிபிஐ வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் பிரிவாக செயல்பட்டது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியதுடன், பணப் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் வழங்கியதைத் தடுக்கவில்லை. எதிர்க்கட்சியினர் கொடுத்த எந்தப் புகார்களுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. பறக்கும்படை பறக்காத படையாக மாறியது.
தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கண்டனத்துக்குரியது. முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குதிரை பேரத்தைத் தடுக்கவேண்டும். சட்டரீதியாக நடத்தப்பட வேண்டும்.