திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியை அருகே கடப்பமரத்துப்பட்டி கிராமம் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகள் விஸ்வஜோதி. இவர் திருச்சி என்.பூலாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (செப். 8) இவர் அங்குள்ள முத்தாளம்மன் குளத்தில், அவரது சகோதரிகள் மகர ஜோதி மற்றும் தேவதர்சினி, ரவி பிரகாஷ் என்ற சிறுவன் ஆகியோருடன் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென விஸ்வஜோதி எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். அதேசமயம் மற்றவர்களும் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டதை அங்கிருந்த படிகட்டில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சபரீஸ்வரன் (வயது 13), உடனடியாக குளத்தில் இறங்கி நீரில் மூழ்கிய விஸ்வஜோதி, தேவதர்ஷினி மற்றும் ரவி பிரகாஷ் ஆகியோரை மீட்க முயன்றார்.
இந்த நிலையில் விஸ்வ ஜோதி நீரில் மூழ்கி விடவே தேவதர்ஷினி மற்றும் ரவி பிரகாஷ் ஆகிய இருவரையும் பிடித்து இழுத்து வந்து பத்திரமாக மீட்டுள்ளார். அதன் பிறகு தான் அனைவரும் சத்தம் போடவே அருகில் உள்ள ஒரு பெண் பார்த்து அவரின் உறவினரின் உதவியுடன் விஸ்வ ஜோதியை மீட்டு மேலே கொண்டு வந்த போது அவர் நீரில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது.