திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் பிளாசம் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் என்ற மழலையர் பள்ளி மூன்று ஆண்டுகளாக செயல்பட்டுவந்தது. இங்கு 220 மாணவ மாணவிகள் எல்கேஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை பயின்றுவந்தனர். விதிகளின்படி பள்ளி செயல்படும் கட்டடம் வாடகை நிலமென்றால் 30 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமை பெற்றதற்கான ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த வகையில் இந்த பிளாசம் பள்ளி அறிக்கையை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், இது விதிமீறலாகும் என்றும் இன்று காலை அந்தப் பள்ளிக்கு கல்வி அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டது.
பள்ளிக்கு சீல்-பெற்றோர்கள் போராட்டம் இதனால் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்று கூறி பெற்றோர்கள் அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் பெற்றோர் திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அலுவலர்கள் மாணவ மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளுமாறு தெரிவித்தனர்.
ஆனால், தங்களது குழந்தைகள் இந்தப் பள்ளியில்தான் பாதுகாப்புடன் கல்வி கற்க முடியும் என்று பெற்றோர் தெரிவித்தனர். இது குறித்து பள்ளியின் தாளாளர் சாருமதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், '30 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு கேட்டு நில உரிமையாளரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஆனால், அவர் அதற்கு சம்மதிக்க மறுக்கிறார்.
திடீரென அலுவலர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளிக்கு சீல் வைத்து உள்ளனர். வேண்டுமென்றே என்னை குறிவைத்து அலுவலர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இதை சட்டப்படி எதிர்கொள்வோம்' என அவர் தெரிவித்தார்.