திருச்சி:திருச்சி விமான நிலையத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் தான் தற்போது இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகம் தண்ணீர் இருக்கும்போது திறந்து விடுகிறார்கள். ஆனால், முறைப்படி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணை இருப்பினும் கர்நாடக அரசு தண்ணீர் வழங்க மறுத்து வருகிறார்கள்.
மேலும், இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு சாதகமான அரசு கர்நாடகத்தில் இருந்தாலும் அவர்கள் தண்ணீர் கொடுப்பதாக இல்லை. மத்திய அரசு, இந்த விவகாரத்தில் நாம் இருப்பது ஒரே நாடு என்பதனை வலியுறுத்தி அழுத்தமாக முடிவினை எடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்.
இதையும் படிங்க:“காலை முதல் காத்திருந்தேன்.. ஆசிரியர்கள் யாரும் வரவில்லை” - அமைச்சர் அன்பில் மகேஷ்
இதனையடுத்து, 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தான் நாங்கள் அதிகம் பயணிக்கிறோம். நாடாளுமன்ற தேர்தல் குறித்து டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் எங்களுடைய கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் சேர்ந்து முடிவை அறிவிப்போம். தேர்தல் சூடு பிடிக்க இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகலாம் எனவே பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும். நாடாளுமன்றத் தேர்தல் பண நாயகமாக தான் இருக்கும்.