திருச்சி:தமிழ்நாட்டில் உள்ள அம்மன் தலங்களில் பிரசித்திபெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். பூச்சொரிதலையடுத்து சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவானது கடந்த 10ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி தினசரி பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றன. இதனையடுத்து கடந்த 19ஆம் தேதியன்று சித்திரை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றதால் இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதனைத்தொடர்ந்து சித்திரைத் திருவிழாவின் 13ஆம் நாளான நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன்(உற்சவர்) வீதியுலா வந்து தெப்பக்குள மண்டபத்தில் பிற்பகல் முதல் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்து வந்தார்.