திருச்சி:திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது, "வருகிற 2024இல் நடைபெறும் லோக்சபா தேர்தலுக்கான டெல்டா மாவட்டங்களின் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மாநாடுபோல் திருச்சியில் நடந்து முடிந்துள்ளது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் எழுச்சியோடு பேசியுள்ளார். அதன் மூலம் இன்று முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் பணிகள் தொடங்கி விட்டன. இந்த கூட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.
கடந்த, 2019ஆம் ஆண்டுபோல் மோடி எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் வீசுகிறது. திமுக கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் சூழல் உள்ளது. இதனால் மக்களின் கவனத்தை திசை திருப்ப, சிலர் திமுகவுக்கு எதிரான வேலைகளை செய்து கொண்டுள்ளனர். அதற்கெல்லாம் திமுக ஒரு போதும் அஞ்சாது.
மகளிர் அணி ஆர்ப்பாட்டம், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளால் திமுக மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள எழுச்சியை திசை திருப்ப பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளார். அவர் என்ன கொடுத்துள்ளார் என்று தெரியவில்லை. அவருடைய மனுவில் குறிப்பிடும் படியான குற்றச்சாட்டு ஏதும் இல்லை. முன்பு, நாங்கள் ஆளுநரிடம் ஜெயலலிதா மீது அளித்த புகார்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை, சொத்து விபரங்களை புகார்களாக அளிக்கிறார். தற்போது ஆளுநரிடம் அளித்துள்ள மனுவை, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவற்றுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரிக்கு வரி பதில் சொல்வார். அண்ணாமலையின் பொய் புகார்களை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம். திமுகவின் அரசியல் வரலாற்றில் இது போன்ற வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளோம்.