தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 30, 2021, 10:46 AM IST

ETV Bharat / state

'கலங்கலாக வரும் குடிநீரைச் சரி செய்ய திட்டம்' அமைச்சர் நேரு தகவல்!

திருச்சி: கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் கலங்கலாக வரும் குடிநீரைச் சரி செய்ய ரூ.4 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.

Nehru
Nehru

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள மாநகராட்சி கோட்ட அலுவலகத்தில், 18 வயது முதல் 44 வயது நிரம்பியவர்களுக்கான கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை அமைச்சர் நேரு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து கோட்ட அலுவலக வளாகத்தில் திருச்சி மாநகராட்சி சித்தா பிரிவு சார்பில், பொது மக்களுக்கு கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு மருந்து மாத்திரைகளை அமைச்சர் நேரு வழங்கினார்.

அதன்பின் அமைச்சர் நேரு பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ வல்லுனர்களுடன் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இன்னும் 4 மாவட்டங்களில் மட்டுமே தொற்று குறையாமல் உள்ளது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும். திருச்சி மாவட்டத்தில் தினசரி தொற்று 1,700 என்ற எண்ணிக்கையில் இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 1,200ஆக குறைந்து உள்ளது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை இல்லாமல் தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் நிலை இருந்தது. தற்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாகவுள்ளன. அரசின் துரித நடவடிக்கையால், இந்த நிலை உருவாகி உள்ளது. பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்.

அவ்வாறு வெளியே வந்தாலும் முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மறக்காமல் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். திருச்சி கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் ஒரு ஆழ்குழாய் கிணற்றிலிருந்து மட்டும் தண்ணீர் கலங்கலாக வருகிறது. அதை சரி செய்வதற்காக உடனடியாக ரூ.4 கோடி மதிப்பீட்டில் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தொடர்ந்து பொது மக்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். திருச்சி மாநகரில் உள்ள தேவைகளை அறிந்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மூலம் செய்து கொடுக்கப்படும். இதில் முதல் கட்டமாக தான் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் ஆய்வு செய்யப்படுகிறது.

அரியமங்கலம் குப்பைக் கிடங்கு அகற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலக்காத நிலையை உண்டாகுவதற்கான பணிகள் நடைபெறுகின்றன. மழை வருவதற்கு முன்பாக தூர்வாரும் பணி திருச்சி மாநகரில் நடைபெற்று வருகிறது.

உய்யக்கொண்டான் வாய்க்காலில் பொதுப் பணித்துறை சார்பில் தூர்வாரப்படுகிறது. மாநகராட்சி பகுதியிலுள்ள வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் சாலைகள் செப்பனிடும் பணியும், புதிய சாலை அமைக்கும் பணிகளும் விரைந்து செயல்படுத்தப்படும்.

கரோனாவை ஒழிப்பது மட்டுமின்றி மக்களுடைய அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்றுவதில், தமிழ்நாடு அரசு முனைப்பாக இருக்கும். விரைவில் சாலை, சீரான குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details