அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு ரோபோ மூலம் மருந்து, மாத்திரை, உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுக்கும்வகையில் பாதிப்பிற்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுவருகின்றனர்.
இவர்களுக்காக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளும் உருவாக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சிலர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிலேயே சுகாதாரத் துறை பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மருந்துப் பொருள்கள் வழங்க புரபெல்லர் டெக்னாலஜிஸ் என்ற தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்று மருத்துவமனைக்கு ஜாபி என்னும் ரோபோக்களை வழங்கியுள்ளது. செவிலியர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கும்போது அவர்களுக்கும் இந்தத் தொற்று பரவ வாய்ப்புள்ளதால், ரோபோக்கள் மூலம் நோயாளிகளை கவனிக்க முடியும் எனக் கூறுகின்றனர்.