திருச்சி மேலசிந்தாமணி, பழைய கரூர் சாலையில் நங்கவரம் பண்ணைக்குச் சொந்தமான இடம் உள்ளது. இதில் நாடார் தெருவிலுள்ள ஒரு ஏக்கர் நிலம், நங்கவரம் பண்ணையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு குடியிருப்பதற்காக பிரித்து வழங்கப்பட்டது. நீண்டகாலமாக சுமார் 100 குடும்பத்தினர் அங்கே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர், அந்த இடத்தை போலி ஆவணத்தை காட்டி நீதிமன்ற உத்தரவுடன் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் ஒரு கட்டமாக அந்த இடத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணிக்கு அவர் ஆயத்தமாகிவருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அப்பகுதி மக்கள், திருச்சி சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடி தலைவர் சகாதேவ பாண்டியன் தலைமையில் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி - ஆட்சியரிடம் மனு இதன்பின்னர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ரவி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”1954ஆம் ஆண்டு நங்கவரம் பண்ணைக்குச் சொந்தமான ஆறரை ஏக்கர் நிலத்திலிருந்து ஒரு ஏக்கர் நிலம் பிரிக்கப்பட்டு, பண்ணையில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு பி்ரித்து கொடுக்கப்பட்டு நாடார் தெரு என்ற பெயரில் வசித்து வந்தோம்.
எங்களது மூதாதையர்கள் பண்ணையில் வேலை பார்த்ததற்காக இந்த நிலம் வழங்கப்பட்டது. 4, 5 தலைமுறைகளாக 100 குடும்பத்தினர் அங்கு வசித்துவருகிறோம். எங்களது வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, சாலை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.
தற்போது எங்களது வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில், போலி ஆவணம் மூலம் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு சேலத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் எங்களை அந்த இடத்திலிருந்து காலி செய்ய முயற்சிக்கிறார். இதை தடுக்க வலியுறுத்தி தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம்” என்றார்.