தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்போன் டவரில் ஏறி போராட்டம் செய்த இளைஞர் - மாறுவேடத்தில் சென்று மீட்ட தீயணைப்பு வீரர்கள்! - fire and rescue department

திருச்சி: மணப்பாறை அருகே காவல்துறையை கண்டித்து செல்போன் டவரில் ஏறி போராட்டம் செய்த பட்டதாரி இளைஞரை மாறுவேடத்தில் சென்று தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Youth protest
Youth protest

By

Published : Nov 23, 2020, 7:44 AM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராசுமெய்யர் (29) என்ற பட்டதாரி இளைஞர். இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன் இருசக்கர வாகனம் மோதியது தொடர்பாக வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இதனால் விரக்தியடைந்த ராசுமெய்யர் நேற்று(நவ.22) மாலை அணியாப்பூர் பகுதியில் ஒரு செல்போன் கோபுரத்தின் உச்சி பகுதிக்கு சென்று தான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் மேலிருந்து குதிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் வையம்பட்டி காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் மைக் மூலம் அந்த இளைஞரை கீழே வரும்படி கூறினர்.

இளைஞரை மீட்ட தீயணைப்புத்துறை

ஆனால் தான் கொடுத்த புகாருக்கு வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே கீழே வருவேன் என்று கூறி அவர் போராட்டத்தை தொடர்ந்தார். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்த நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.

பின்னர் தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று செல்போன் கோபுரத்தில் ஏறி அவரை மீட்க முயற்சிக்க அவர் ஏதும் குதித்து விடுவாரோ என்ற அச்சம் நிலவி வந்தது.

இதையறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன், வீரர் முத்துச்சாமி ஆகியோர் கிராமத்தைச் சேர்ந்தவர்களை போல் காக்கி சீருடையை கழற்றி விட்டு இடுப்பு, தலையில் துண்டை கட்டிக் கொண்டு மாறுவேடத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி அவரை பிடித்த தீயணைப்பு படையினர் குண்டு கட்டாக தூக்கி கீழே கொண்டு 'வந்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து ராசுமெய்யரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்து அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தீயணைப்பு வீரர்கள் சமயோசிதமாக சிந்தித்து மாறுவேடத்தில் சென்று இளைஞரை மீட்டு கொண்டு வந்ததைப் பார்த்த மக்கள் கைகளை தட்டியும், விசில் அடித்தும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தெரிந்த கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார் அமித்ஷா- கமல்

ABOUT THE AUTHOR

...view details