மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த பட்ஜெட் அறிவிப்பின் போது தமிழ்நாட்டிற்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளன. மேலும், பலரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய தேவைகள் குறித்து பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இது குறித்து நுகர்வோர், சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேகரன் கூறியதாவது:
சென்னையிலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட பல்லவன் விரைவு ரயில் சேவை பின்பு காரைக்குடி வரை நீட்டிக்கப்பட்டது. இருமார்க்கத்தில் இயக்கப்படும் இந்த ரயிலை பெரும்பாலும் திருச்சி மக்களே பயன்படுத்தி வருகின்றனர். அதனால் காரைக்குடிக்கு செல்லும் அந்த ரயில் காலியாகத்தான் சென்று வந்து கொண்டிருக்கிறது. இது ரயில்வேக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்த பல்லவன் விரைவு ரயிலை மீண்டும் திருச்சியிலிருந்து சென்னைக்கு இயக்க வேண்டும்.
மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரயில் பாதைக்கு மாற்றப்பட்டபோது திருச்சியில் இருந்து புறப்பட்ட பல ரயில்கள் நிறுத்தப்பட்டன. அகல ரயில் பாதை பணி முடிவடைந்த பின்னரும் அந்த ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. குறிப்பாக தஞ்சாவூர் வழியாக இயக்கப்பட்ட திருச்சி-சென்னை பயணிகள் ரயில் சேவை, திருச்சி - திருப்பதி விரைவு ரயில் சேவை ஆகியவை நிறுத்தப்பட்டன. இவ்வாறு நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.
நுகர்வோர், சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேகரன் பேட்டி திருச்சியில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட ஒரு ரயிலும் தற்போது மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் அதிக விலை கொடுத்து பேருந்துகளில் பயணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், திருச்சியில் இருந்து பெங்களூர் செல்லும் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே திருச்சியில் இருந்து பெங்களூருக்கு தனி ரயில் இயக்கப்பட வேண்டும். பகல் அல்லது இரவு நேர ரயிலாக இது இயக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றால் திருச்சி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள், என்றார்.