திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்தவர் வரதராஜூ. இவர் கடந்த 30ஆம் தேதி ஓய்வு பெற்றதால், அவருக்கு பதிலாக தஞ்சை சரக டிஐஜியாக இருந்த லோகநாதன் பதவி உயர்வு மூலம் திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதன்பின் அவர் திருச்சி - புதுக்கோட்டை சாலையிலுள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையராக பொறுப்பேற்றார்.
அதைத் தொடர்ந்து அவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பராமரிப்பதற்கும், குற்ற நடவடிக்கையைத் தடுப்பதற்கும், கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கும், சாலை விபத்துகளை தடுப்பதற்கும் முன்னுரிமை கொடுக்கப்படும்.
தற்போது கரோனா வைரஸ் பரவுதல் காரணமாக பொதுமக்கள் தங்களது புகார்களை இணைய வழியிலும் அனுப்பி குறைகளுக்குத் தீர்வு காணலாம். மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில், 9626273399 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக புகார்களைத் தெரிவிக்கலாம். அப்படி தெரிவித்தால், அதுகுறித்து சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதன் மூலம் புகார் கொடுப்பவர்களுக்கு, அவர்களது செல்போனுக்கு ஒப்புகை குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்படும்.