திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பகல்பத்து வைபவத்தை தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர் ராப்பத்து வைபவம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (டிச.29) காலை 6 மணி முதல் 9 மணி வரை மூலவர் ரங்கநாத பெருமாள் முத்தங்கி சேவை தரிசனம் நடைபெற்ற நிலையில், 9 மணிக்கு ஆரியபட்டால் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், பிற்பகல் 12 மணிக்கு ஆரியபட்டால் நுழைவு வாயில் திறக்கப்பட்டது. அதேபோல் ஒரு மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
மேலும் மதியம் 1 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட உற்சவர் நம்பெருமாள், 2 மணிமுதல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் வைரமுடி கிரீடம், வைர அபயஹஸ்தம் மற்றும் திரு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன் பின் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் 9 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரங்கநாதரின் முத்தங்கி சேவையையும், உற்சவர் நம்பெருமாள் சேவையையும் தரிசித்தனர்.
இதையும் படிங்க:மார்கழி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!