திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் வாக்கிங் சென்றபோது படு கொலை செய்யப்பட்டார். 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற இந்தக் கொலை தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின்னர், திருச்சியில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரை ஓரமாகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலையாளி மற்றும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாத நிலையில் தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில், 15 நாள்களுக்கு ஒரு முறை விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், விசாரணையை சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் கண்காணிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் முன் நேற்று (ஏப்.22) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.
விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம்: அதில், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளது எனவும், சம்பவம் நடந்த காலத்தில் பணியிலிருந்த ஆறு காவல்துறை அதிகாரிகள் உள்பட 198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், உயர் அதிகாரிகளையும் விசாரிக்க உள்ளதாகவும் அயல்நாடுகளில் உள்ள தொடர்பு குறித்த கேள்விக்கு அயல்நாடுகளில் தொழில் செய்பவர்கள் இங்கேதான் வசிக்கிறார்கள் அவர்களையும் விசாரணைக்கு வரவைப்போம் தினமும் கிட்டத்தட்ட பத்துபேரை விசாரித்துக்கொண்டிருக்கிறோம் ராமஜெயம் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள்,வியாபாரிகள் என அனைவரிடமும் விசாரணை நடத்தி உள்ளோம் என தெரிவித்தார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. திருச்சி மட்டுமல்லாமல் சென்னை ,மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள முக்கிய குற்றவாளிகளிடம் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.மேலும், 43 அதிகாரிகள் புலன் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் எனவும், கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரகசிய அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணையை ஜூன் 10ஆம் தேதி தள்ளிவைத்தார். இந்த நிலையில் திருச்சியில் இன்று (ஏப்.23) சிறப்பு புலனாய்வு குழு செய்தியாளர்களை சந்தித்து வழக்கின் நிலை குறித்து விளக்கினார்.