திருச்சி: இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் 'இராக்கதன்' (Raakadhan) திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று (ஜூலை.21) வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேளாங்கண்ணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது.
மேலும் திரைப்படத்தின் கதாநாயகனாக வம்சி கிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் பாஸ்கர் நடித்துள்ளனர். கதாநாயகியாக காயத்ரியும், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக ரியாஸ் கான், நிழல்கள் ரவி, சஞ்சனா சிங், ஷாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் பாடல்களை சைந்தவி மற்றும் ஜி.வி பிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர்.
மேலும் படத்திற்கு மனாஸ்பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் குமார் இசை அமைத்துள்ளார். பாடல்களை பாபு கிருஷ்டியன் எழுதியுள்ளார். மேலும் படத்தின் கலை இயக்குனராக இன்ப பிரகாஷ், மக்கள் தொடர்பு தேஜா, சண்டை பயிற்சி சரவணன் ஆகியோர் பணிபுரிந்து உள்ளனர். மருதம் புரொடக்சனுக்காக ராணி ஹென்றி சாமுவேலுடன் இணைந்து எம்.ஏ.ஜி பாஸ்கர் இப்படத்தை தயாரித்துள்ளனர். தற்போது இராக்கதன் படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது.
நடிகர் ரியாஸ் கான் பேசியது, "இப்படத்தின் ஹைலைட்டே அந்த கதாப்பாத்திரம் தான் என மக்கள் சொல்லுகின்றனர். எனக்கும் பிடித்திருந்தது. அந்த கதாபாத்திரத்திற்காக மட்டும் இப்படத்தில் நடித்தேன். இப்படத்தின் முக்கிய கருவே அந்த கதாப்பாத்திரமே தான். இப்படத்தில் அனைவருமே ஹூரோ தான், சொல்லப்போனால் இப்படத்தின் கதைதான் ஹூரோ. அனைவரின் கதாப்பாத்திரமும் சுற்றி சுற்றி வந்து இறுதியில் வெளிவரும்" என்று தெரிவித்தார்.