திருச்சி:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் இன்று (ஜூலை 24) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "மணிப்பூரில் மூன்று மாதங்களுக்கு முன் தொடங்கிய மோதல் இன்று வரை நடந்து வரும் நிலையில், அதைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
குஜராத்தில் கலவரத்தை (Gujarat Violence) ஏற்படுத்தி பா.ஜ.க வெற்றி பெற்றனர். அதுபோல, நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் ஒருபகுதியாக பொது சிவில் சட்டத்தை (Uniform civil code) கொண்டு வந்து மக்களை பிளவுப்படுத்தும் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக தெரிவித்தார். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் மீது விரைந்த அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர்கள் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. குறிப்பாக, குட்கா வழக்கில் அனைத்து ஆதாரங்கள் இருந்தும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஆளுநர், அமலாக்கத்துறையும் ஆகிய யாரும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி போல மோடியின் ஆட்சி:மோடியின் ஆட்சி 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' படத்தில் இருசமூகங்களிடையே மோதலை ஏற்படுத்தி அந்த படத்தின் நாயகனான வடிவேல் வேடிக்கை பார்ப்பதை போல, மணிப்பூரில் இருசமூகங்களிடையே மோதலை ஏற்படுத்தி பிரதமர் மோடி வேடிக்கை பார்ப்பதாக கடுமையாக விமர்சித்தார். பா.ஜ.க ஆட்சியை தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லாமல் அரசியலமைப்பு சட்டம் மாற்றியமைக்கப்படும் என்பதால் தான், ஜனநாயகத்தை காக்கும் வகையில் அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்தார். ஆகவே, என்.டி.ஏ கூட்டணியை இந்தியாவை புதைக்குழியில் தள்ளிய பா.ஜ.க தலைமையிலான அணி என தான் கூறவேண்டும் என்றார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பம் செய்யாத போதும், மணிப்பூர் சம்பவம் (Manipur Riots) குறித்து பிரதமர் விவாதிக்க முன்வர நாடாளுமன்றத்திற்கு வர மறுப்பதாகவும் ஆகவே, குடியரசு தலைவர் ஆட்சியை மணிப்பூரில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன்மூலம், அம்மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி சுமூக நிலை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மணிப்பூர் கலவரம் - மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்:நாளை இந்தியா முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் அகில இந்திய அளவில் போராட்டம் நடைபெற உள்ளதாக கூறிய அவர், மணிப்பூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.