திருச்சி புத்தூரில் பல வருடங்களாக மீன் மார்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மீன் மார்க்கெட்டை சுற்றி அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் உள்ளன.
இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பல புகார்கள் வந்ததால், இதைனை வேறு இடத்திற்கு மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதனையடுத்து திருச்சி உறையூர்- குழுமணி சாலையில் லிங்க நகர் காசி விளங்கி பகுதியில் ரூ. 3.32 கோடியில் புதிய மீன் மார்கெட் வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகத்தில் மொத்த 8 விற்பனை கடைகளும், சில்லறை விற்பனைக்கு
25 கடைகள் என மொத்தம் 33 கடைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும், மீன் வெட்டி தருவதற்கு நவீன முறையில் தனி மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மீன் மார்கெட் புத்தூரிலிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டு நேற்று (அக்.10) முதல் செயல்பட தொடங்கியது.