திருச்சி:தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை தொடக்க விழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை, தமிழகம் என அழைக்க வேண்டும் எனக் கூறிய கருத்தின் உட்பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பிரிவினை வாத கருத்துகள் அதிகம் வர ஆரம்பித்துள்ள நேரத்தில், தமிழ்நாட்டை தனி நாடு என எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற அர்த்தத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்'' என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
மேலும் அவர், ''நான் தமிழ்நாட்டைச் சார்ந்தவள், என் மொழி தமிழ் மொழி, என் மாநிலம் தமிழ்நாடு, என் நாடு பாரத தேசம். ஆளுநர் அவரின் கருத்துக்களை கூறக்கூடாது என சொல்ல முடியாது. தமிழ்நாட்டின் சில நிகழ்வுகளைப் பார்த்து அவர் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்" என்றார்.