திருச்சி:திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (09.10.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அனைத்து கோயில்களிலும் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்பது பொதுவான கோரிக்கை. உலக புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம், வாகன நிறுத்தக் கட்டணம், சுங்கக் கட்டணம் என பல வழிகளில் வருவாய் உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், சமயபுரம் பகுதியில் வசிக்கக்குடிய குடிமக்களிடமிருந்தும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
எனவே அப்பகுதி மக்களுக்கு, கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சமயபுரம் பகுதி மக்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்தி உள்ளனர். உள்ளாட்சி நிர்வாகம், அறநிலையத்துறை உள்ளூர் மக்களுக்கு கட்டண வசூல் முறையை ரத்து செய்ய வேண்டும். கோயிலுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்.
பூட்டப்பட்டுள்ள விநாயகர் கோயிலை திறக்க வேண்டும்: திருச்சி நீதிமன்ற வளாகத்தில் 100 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோயில் ஒரு வாரமாக பூட்டிக் கிடக்கிறது. நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சங்கக் கட்டிடத்தில் திராவிட மற்றும் கம்யூனிஸ்ட் நக்சல் வக்கீல்கள் நடத்திய பிரியாணி விருந்தை நடத்த அனுமதிக்காததால், விநாயகர் கோவிலை பூட்டி வைத்துள்ளனர். இதனால், பக்தர்கள் மனம் புண்படுகிறது. அதை திறக்க வேண்டும்.
பா.ஜ.க பொருப்பில் இருந்தவரை தண்ணீர் பிரச்னை இல்லை:காவிரி ஆணையம் மற்றும் நீதிமன்ற உத்தரவை அவமதித்து, காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். டெல்ட்டா பகுதி மக்களுக்கு காவிரியிலே இருந்து தண்ணீர் கிடைக்காததற்கு மிக முக்கிய காரணம் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் தான்.