திருச்சி: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்கு முன், பிரதமர் மோடி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய கோயில்களில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அதன்படி, நாளை (ஜன.20) காலை 10.30 மணிக்கு, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மோடி திருச்சி வருகிறார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து, ஸ்ரீரங்கம் கோயிலுக்கும், அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கும் ஹெலிகாப்டரில் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக, திருச்சியில் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் பஞ்சக்கரை பகுதியில் உள்ள திடலை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் பின், பிரதமர் வருகைக்கான ஹெலிபேட் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன. பிரதமர் வருகைக்காக, ஹெலிபேட் அமைக்கப்படும் பகுதியை, பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.
முதல்கட்டமாக, கொள்ளிடம் பஞ்சக்கரை பகுதியில் உள்ள திடலை, மாநகராட்சிப் பணியாளர்கள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சுத்தம் செய்து சமன் செய்தனர். அடுத்து, தளம் அமைத்து, ஜல்லி பரப்பி தார் போட்டு, 3 ஹெலிபேட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹெலிபேட் அமைக்கும் பகுதியில், சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்வதால், பஞ்சக்கரையில் இருந்து கோயிலுக்குச் செல்லும் சாலையிலும் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்படுகிறது. அந்தப் பணிகளை, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் பார்வையிட்டார்.