கரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 23ஆம் தேதி மாலை 6 மணியுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளும் மூடப்பட்டன.
இதனிடையே, திருச்சியில் டாஸ்மாக் கடைகளிலிருந்து மதுபானங்கள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகரித்ததால், கடைகளிலிருந்த அனைத்து மதுபானங்களும் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபம், தேவர் ஹால் ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மேலும், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அந்தப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஆரஞ்சு மண்டலத்தில் இருக்கும் திருச்சியில் வரும் மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடைகளைத் திறப்பதற்கான ஆயத்தப் பணிகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், திருச்சியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் முன்பு தடுப்புக் கட்டைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
டாஸ்மாக் கடை முன்பு போடப்பட்டுள்ள சமூக இடைவெளி வட்டங்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய, கடைகளுக்கு முன்பு ஆறு அடிக்குத் தரையில் வட்டமிடும் பணியும் முறுக்கி விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, திருமண மண்டபங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மதுபானங்கள் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகளுக்கு எடுத்துவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் மதுப் பிரியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க : லேசான கரோனா அறிகுறியா? - வீட்டிலேயே தனிமைப்படுத்த அரசு உத்தரவு!