திருச்சி:வையம்பட்டியை அடுத்த கருங்குளத்தைச் சேர்ந்தவர் ஃபிரான்சிஸ் சவரியார் கூலி வேலை செய்துவருகிறார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துஆவாரம்பட்டி பட்டியைச் சேர்ந்த சினேகா பிரிட்டோ மேரி (21) என்பவருக்கும் கடந்த ஓராண்டிற்கு முன்பு திருமணமாகி கூட்டுக் குடும்பமாக வாழ்ந்துவந்துள்ளனர்.
இரண்டு முறை கருவுற்று கரு கலைந்த சினேகா பிரிட்டோ மேரி மூன்றாவது முறையாக மீண்டும் கருவுற்றார். இதனையடுத்து மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டபோது கரு முழுமையான வளர்ச்சி அடையாததால் கருவைக் கலைத்துவிடுமாறு மருத்துவமனையில் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த சினேகா பிரிட்டோ மேரி நேற்று முன்தினம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் களைக்கொல்லி பூச்சி மருந்தை உட்கொண்டுள்ளார். மயக்க நிலையில் இருந்த சினேகா பிரிட்டோ மேரியை மீட்ட அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக வையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்து உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனையடுத்து உடற்கூராய்வு மேற்கொள்ள ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தேர்தல் வேலை காரணமாக வர காலதாமதமானதால் உடற்கூராய்வு செய்யும் பணியும் காலதாமதமாகிக் கொண்டே இருந்தது.