அதிமுகவில் திருச்சி மாநகர், புறநகர் என்று இரு அமைப்புகள் மட்டுமே இருந்தன. சமீபத்தில் இந்த அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டு மூன்றாகப் பிரிக்கப்பட்டன.
திருச்சி மாநகர், புறநகர், வடக்கு என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் மாநகர் மாவட்டச் செயலாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நியமனம் செய்யப்பட்டார். இவரது கட்டுப்பாட்டில் திருச்சி கிழக்கு, மேற்குத் தொகுதிகள் அடங்கியுள்ளன.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்
இந்நிலையில் திருச்சி மாநகர் பாலக்கரை பகுதியில் செயலாளராக இருந்தவர் கலீல் ரகுமான். இவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக சுரேஷ்குப்தா என்பவர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பரிந்துரையின்பேரில் நியமனம்செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் அமைப்பு சார்பில் கண்டன போஸ்டர்கள் இன்று (செப்.03) மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளன.
இஸ்லாமியரைப் புறக்கணித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனையும், அதிமுகவையும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இஸ்லாமியர்கள் புறக்கணிப்பார்கள் என்று வாசகங்கள் அந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. திருச்சி மாநகரில் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பு பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்!