நடிகர் சரத்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு திருச்சி:நடிகர் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் போர் தொழில். இந்தப்படம் கடந்த 9 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. பெரிதாக எதிர்பார்க்கப்படாத நிலையிலிருந்த இந்த திரைப்படத்தை வெளியிட முதலில் குறைந்த திரையரங்கங்களே ஒதுக்கப்பட்டன. படம் வெளியானதற்குப் பின் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படத்திற்கு தற்போது கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு அனைத்து காட்சிகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாகத் திரையிடப்பட்டு வருகின்றது.
இந்த திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படத்தில் நடித்த நடிகர்கள் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் போர் தொழில் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் ரசிகர்களைச் சந்திப்பதற்காக நடிகர் அசோக் செல்வன், சரத்குமார் மற்றும் படத்தின் இயக்குநர் விகனேஷ் ராஜா ஆகியோர் வருகை தந்து ரசிகர்களோடு கலந்துரையாடினர். பின்னர் நடிகர் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்,“இயக்குநர் விக்னேஷ் ராஜா தான் இயக்கிய முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். மேலும் இயக்குநர் பிரம்மாண்டமான முறையில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் என்பதில் சந்தேகமே படாத வகையில், ரசிகர்கள் இந்த படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை இதுவரையிலும் தெரிவிக்கவில்லை என்பது மகிழ்ச்சியாக உள்ளதுடன், மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்துள்ளது. திருச்சியில் எடுக்கப்பட்ட படம் என்பதால் மிக பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. அதேபோன்று அடங்காதே படமும் திருச்சியில் எடுத்துள்ளேன். மூன்று மாதத்தில் வெளியாக உள்ள அப்படமும் வெற்றிப் படமாக அமையும் என நம்புவதாக” தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,“சிறந்த படங்கள் வெளியாகும் போது அது 45 நாட்கள் தொடர்ச்சியாக தியேட்டரில் ஓட ஏதுவாக பல்வேறு வசதிகள் குறித்து தயாரிப்பாளர் கவுன்சிலில் பேச உள்ளேன். விஞ்ஞான வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது. ஒடிடி போன்ற தளங்கள் வருவது முன்னேற்றம் தான். இதனைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் அதற்கு ஈடு கொடுத்துச் சிறந்த படங்களை எடுப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்” என்று போர் தொழில் படத்தை வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர் பட்டாளங்களுக்குப் படக்குழுவின் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் தன் நன்றியைத் தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்கள் நடிகர் சங்க கட்டிடம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த நடிகர் சரத்குமார்,“நடிகர் சங்கத்துக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது, நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் அது முடிந்துவிடும் என நினைக்கிறேன்” என்றார். இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கௌரவப்படுத்தியுள்ளது குறித்து எழுதப்பட்ட கேள்விக்கு,“கல்விக்குப் பல நடிகர்கள் உதவி புரிவது போல நடிகர் விஜய்யும் உதவி புரிந்தது சந்தோஷம் தான். யாரும் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான், இருக்கிற எல்லாருமே அரசியலுக்கு வரவேண்டுமென்றுதான் நான் சொல்கிறேன்” என்று மீண்டும் சர்ச்சைக்குள் சிக்காத வகையில் பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து, படத்தைப் பற்றி ரசிகர்களின் கண்ணோட்டத்தில் அசோக் செல்வன் கூறுகையில்,“மக்களிடம் இருந்து இதுபோன்ற மிகப்பெரிய வரவேற்பு நான் இதுவரையிலும் பார்த்ததில்லை. ஓ மை கடவுளே, தெகிடி போன்ற படங்களை விட இது வேறு மாதிரியாக உள்ளது. இந்த நேர்மறையான எண்ணத்தை டீமாக அனைவரும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என்றார். முன்னதாக மக்கள் நல்ல படத்திற்கு நன்றாக வரவேற்பு கொடுப்பார்கள் என்பதற்கு இந்த படம் சாட்சி என்ற நம்பிக்கை பெற்றுள்ளது. இதைப் போன்று மக்களுக்கு உறுதியளிக்கும் வகையில் வேறு கதை களங்களைத் தேர்வு செய்யலாம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:Vijay:12 மணி நேரத்துக்கும் மேலாக நின்று பரிசளித்த விஜய்... வாரிசு ஸ்டைலில் விடைபெற்றார்!