திருச்சி கே.கே.நகர், அன்பழகன் தெருவில் லைப் கேர் சென்டர் டிரஸ்ட் சார்பில் போதை மீட்பு மையம் நடத்தப்பட்டுவருகிறது. இந்த மையம் நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதை மணிவண்ணன், திவான் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு லிங்க நகரில் ஒரு கிளையும் உள்ளது.
இதன் மூலம் பலர் இங்கு வந்து சிகிச்சைக்காக தங்குவது வழக்கம். இந்த வகையில் 24 பேர் வரை தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இதில், மே 28ஆம் தேதி கடலூர் மாவட்டம் கண்டமங்கலத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (35) என்பவர் தங்கியிருந்தார். இவர் காவல் துறையில் பணியாற்றி பணியிடைநீக்கம் செய்யப்பட்டவர். இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி தமிழ்ச்செல்வன் இறந்துவிட்டதாக கூறி அவரது உறவினர்களுக்கு போதை மீட்பு மையத்தினர் தகவல் கொடுத்துள்ளனர்.
அலறி அடித்து வந்த உறவினர்கள், உடலை பெற்றுக் கொண்டு இறுதி சடங்குக்கு தயாராகினர். இறுதிச் சடங்குகள் செய்தபோது உடலில் ரத்த காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் தொடர்ந்து இறுதிச் சடங்குகளை முடித்து விட்டனர். இந்நிலையில், இன்று அவர்களது உறவினர்கள் காயம் குறித்து கேட்பதற்காக போதை மீட்பு மையத்திற்கு வந்துள்ளனர். அப்போது, போதைக்கு அடிமையானவர்கள் பலர் அங்கு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருந்ததை உறவினர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.