தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பாஜகவை விவசாயிகள் புறக்கணிப்பார்கள்- விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் - congress - dmk coalition
திருச்சி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் உள்ளது. பாஜகவை விவசாயிகள் புறக்கணிப்பார்கள் என்று தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் பேட்டியளித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறுகையில், 'பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாய கடன் தள்ளுபடி, விவசாயத்திற்கு தனி பட்ஜெட், எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்துதல் போன்ற எந்த திட்டங்களும் குறிப்பிடப்படவில்லை. டெல்லியில் விவசாயிகள் 140 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். பிரதமரோ மற்ற பாஜக தலைவர்கள் யாரும் விவசாயிகளை சந்தித்து பேசவில்லை. நதிகளை இணைப்போம் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் ஒரு அடிக்கல் கூட நடவில்லை. விவசாயிகளுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் பாஜகவை விவசாயிகள் புறக்கணிப்பார்கள். காங்கிரஸ் வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் கடன் தள்ளுபடி, தனி பட்ஜெட், 72 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை அமல் போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
அதனால் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும். இதற்காக விவசாய சங்கங்கள் கிராமம் கிராமமாக சென்று பரப்புரை செய்வோம். பாஜகவை விவசாயிகள் புறக்கணிப்பார்கள் என்றார்.