திருச்சி மாவட்டம் உறையூர் பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். கூலித் தொழிலாளியான இவர் கடந்த ஜூலை 27ஆம் தேதி இரவு, தனது இருசக்கர வாகனத்தில் பாண்டமங்கலம் பிரதான சாலையில் சென்றுள்ளார்.
அப்போது அங்கு சாலையின் குறுக்கே உறையூர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் அழகுமுத்து, காவலர்கள் செல்லபாண்டியன், சுகுமார், ஓட்டுநர் இளங்கோவன் ஆகியோர் சாதாரண உடை அணிந்து நின்றுள்ளனர். அவர்களை காவலர்கள் என்று அறியாத ஜெயக்குமார் சாலையில் செல்ல வழிவிடுமாறு கேட்டுள்ளார். இதனால் ஜெயக்குமாருக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் ஜெயக்குமாரை அங்கேயே சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். பின்னர், அவர்கள் உறையூர் காவல் நிலையத்திற்கு ஜெயக்குமாரை அழைத்துச் சென்று அங்கையும் வைத்துத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, அவர் மீது காவல் துறையினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் நடக்க முடியாதவாறு காலில் அடிபட்டு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கால் முட்டி உடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர் தன்னை இந்த நிலைக்கு தள்ளிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார்.