திருச்சி: தமிழ்நாடு டிஜிபி தலைமையில் காவல் நிலையங்களில் நடைபெறும் மரணங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு திருச்சி தூய வளனார் கல்லூரியில் நேற்று (மே 21) நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தலைமை தாங்கினார். இதில் மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்கள் மற்றும் திருச்சி மாநகரிலுள்ள காவல் உயர் அலுவலர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காவல் நிலைய மரணங்கள் தடுப்பது குறித்து ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள், துணை இயக்குநர்கள், வழக்கறிஞர்கள் அறிவுரை ஆலோசனை வழங்கினர். 300-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர். கூட்டத்திற்கு மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். பொதுவாக சென்னையில்தான் இப்படிப்பட்ட கூட்டம் நடத்தப்படுவது வாடிக்கை ஆனால் முதல்முறையாக திருச்சியில் நடைபெற்றது.
முன்னதாக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளும் தற்போது இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் சுமார் 950 மரணங்கள் 10 ஆண்டுகளில் காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்று உள்ளது அதில் தமிழ்நாட்டில் 84 மரணங்கள் நடைபெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இனி ஒருவர்கூட காவல்துறை கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் உயிர் இழக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். அந்த அடிப்படையில் இந்த பயிற்சி முகாம் திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்ளக்கூடிய அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. மேலும் வர்மக்கலை, கராத்தே குங்பூ உள்ளிட்ட தற்காப்பு கலைகளையும் இந்த கருத்தரங்கில் கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. காவல்துறையினர் தாக்கினாள் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் உயிர் இழந்தார்கள் என்று சொல்ல முடியாது.