திருச்சி: தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் தேர்த் திருவிழா கடந்த 15ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இந்நிலையில் கடந்த 5 நாள்களாக திருத்தேர் உற்சவம் நடைபெற்று வருகிறது. மதுரை காளியம்மன், ஓலை பிடாரியம்மன் ஆகிய இரு தெய்வங்களும் தனித்தனியே சுமார் 40 அடி உயரமுள்ள 2 தேர்களில் எழுந்தருளுவர்.
அப்போது பக்தர்கள் திருத்தேரை தோளிலும், தலையிலும் சுமந்துகொண்டு முக்கிய வீதிகள் வழியாக உலா வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. இந்நிலையில், நேற்று (ஏப். 03) ஒரு பிரிவினர் பூத்தட்டு எடுத்துச் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை கல்லால் தாக்கியுள்ளனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
மேலும், பாதுகாப்பிற்காக இருந்த காவல் துறையினர் வாகனங்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. அப்போது சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அங்கிருந்தவர்களை விரட்டி அடித்தனர். அப்போது இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்களை காவல் துறையினர், விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.