திருச்சி: திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக்கான ரியாஸ் (17) என்பவர் தனது உறவுக்கார பெண்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை வழிமறித்துள்ளார். தான் போலீஸ் எனக் கூறிய அந்த நபர், ரியாஸிடம் ஆர்.சி புக், லைசென்ஸ் ஆகியவற்றைக் கேட்டுள்ளார். பின்னர் ரியாஸ் மற்றும் அந்தப் பெண்களின் கைகளில் இருந்த செல்போன்களையும் வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட ரியாஸ் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், செல்போன்களை பறித்துச்சென்ற நபர் அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்த மணிவேல் (39) என்பதும், அவர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து மணிவேலை போலீசார் கைது செய்தனர்.