திருச்சி:தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.
அதில், “நான் சமயபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் வாகன விபத்தில் சிக்கி சிகிச்சையில் உள்ள நண்பரின் சகோதரரைப் பார்த்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்காக நின்றபோது, ஒரு இளைஞர் லிப்ட் கொடுப்பது போன்று சமயபுரம் அடுத்து இருங்களூர் அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு தன்னை, ஐந்து இளைஞர்கள் அடைத்து வைத்து, வாள் மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கி, மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி, சமயபுரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டுச் சென்று விட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் பலத்த காயம் அடைந்த இளைஞர், திருச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பெயரில், லால்குடி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் தலைமையில், சமயபுரம் காவல் ஆய்வாளர் விதுன்குமார் உள்ளிட்ட தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் சென்று பார்த்தனர்.
அப்போது சமயபுரம் அருகே இருங்கலூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் இருந்த 5 பேரை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிய வசந்த், ரவி போஸ்கோ இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு, திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அய்யனார், யுவராஜ், கவியரசன் ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.