திருச்சி: நடு இருங்களூரைச் சேர்ந்தவர் மைக்கேல் மகன் ஆரோக்கியசாமி. இவருக்கு சொந்தமாக இருங்களூர் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பிலான 60 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலையில், நேற்று மண்ணச்சநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆரோக்கியசாமி என்பவர் 5 பேரை அழைத்துக் கொண்டு திருச்சி மாநகர் காஜா நகர் மெயின் ரோடு கருப்பையா மகன் சங்கர் என்பவருக்கு (பொது அதிகார ஆவணம்) பவர் ஏஜென்ட் மாற்ற சார் பதிவாளர் கோகிலாவை அணுகி உள்ளார்.
அப்போது ஆரோக்கியசாமியின் ஆதார் கார்டை சார் பதிவாளர் கேட்டுள்ளார். அப்போது அந்த ஆதார் கார்டில் ஏதோ தவறு உள்ளது என சந்தேகம் ஏற்பட்டதால், ஆவணங்களை சரிபார்த்து பின்னர் பவர் ஏஜென்ட் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதனால் ஆரோக்கியசாமி என்பவர் உடன் வந்த 5 பேரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து தப்பியோடினர். அதனைத் தொடர்ந்து சார் பதிவாளர் கோகிலா இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆரோக்கியசாமியை விசாரித்தபோது, அவர் ஆரோக்கியசாமி இல்லை என்றும், திருச்சி மாநகர் பீமா நகரைச் சேர்ந்த நாகமுத்துவின் மகன் சண்முக சுந்தரம் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், இவர் தினக் கூலிக்கு பெயிண்டிங் வேலை செய்பவர். போலியாக ஆதார் அட்டை தயார் செய்து பவர் ஏஜென்ட்டாக சங்கர் என்பவருக்கு மாற்றம் செய்ய வந்த தகவலை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து மேலும் சண்முகசுந்தரத்தை விசாரித்தபோது, “எனக்கு செலவுக்கு பணம் தருவதாக சங்கர் என்பவர் அழைத்து வந்தார். கையெழுத்து மட்டும் போட்டால் போதும் வாருங்கள் என்று 6 பேர் சேர்ந்து மண்ணச்சநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து சொல்லும் இடத்தில் ஆரோக்கியசாமி என கையெழுத்து போட்டால் போதும் என்று தெரிவித்ததின் பேரில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தேன்" என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் சண்முக சுந்தரத்துடன் யார் யார் வந்த 5 பேர் யார் என்று விசாரணை செய்து, சார்பதிவாளர் அலுவலகத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் 5 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த திருச்சி மன்னார்புரம் காஜா நகரைச் சேர்ந்த சங்கர், தென்னூரைச் சேர்ந்த ராஜ்கபூர், சலீம், செல்வராஜ், நடு இருங்களூரைச் சேர்ந்த சாமிதுரை ஆகிய 5 பேரை மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்தனர்.