திருச்சி அருகே குளத்தூரில் 1826ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி பிறந்த கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மயிலாடுதுறையில் கோர்ட் முன்சீப்பாக (முதல் நீதிபதியாக) பணியாற்றியும், மயிலாடுதுறை நகராட்சியில் முதல் நகர்மன்றத் தலைவராகவும் பதவிவகித்தார். இதனால் இவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்படுகிறார்.
தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக பல்வேறு தமிழ், இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். வெளிநாடுகளில் பிரபலமாகி வந்த நாவல் கதைகளைப் போன்று தமிழின் முதல் நாவலான பிரதாபமுதலியார் சரித்திரத்தை எழுதினார். அவரது 194ஆவது பிறந்ததினம் நேற்று (அக். 12) மயிலாடுதுறையில் கவிஞர் வேதநாயகம் பிள்ளை அடக்கம் செய்யப்பட்ட கல்லறைத் தோட்டத்தில் கொண்டாடப்பட்டது. அங்கு உள்ள கவிஞர் வேதநாயகம் பிள்ளையின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக வந்த சமூக ஆர்வலர்கள் அவரது கல்லறை பராமரிப்பின்றி சிதிலம் அடைந்து கிடப்பதைக் கண்டு மன வேதனை அடைந்தனர்.