திருச்சி: விமான நிலையம், ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை, துறைமுகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு என பல்வேறு துறைகளில் 20 ஆயிரத்து 140 கோடி மதிப்பீட்டில் நிறைவடைந்த பணிகளை துவங்கவும் மற்றும் துவங்க உள்ள பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று திருச்சிக்கு வந்தார்.
இவ்வாறு பல்வேறு பணிகளைத் துவங்கி வைத்த பின் பேசிய அவர், “முதற்கண் உங்கள் அனைவருக்கும் 2024ஆம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அனைவருக்கும் அமைதியானதாகவும், வளமானதாகவும் இருக்கட்டும். இந்த ஆண்டுக்கான என்னுடைய முதலாவது பொது நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடக்கிறது என்பதை நான் என் பாக்கியமாக கருதுகிறேன்.
சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த வளர்ச்சித் திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பலப்படுத்தும். சாலை வழிகள், ரயில் பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிசக்தி, ஆற்றல் மற்றும் ஒரு பெட்ரோலியக் குழாய் இணைப்பு ஆகிய திட்டங்களுக்காக நான் உங்களுக்கு என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இதில் பல திட்டங்கள் பயணிப்பதில் சுலபத்தன்மை, அதை ஊக்கப்படுத்துவதோடு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். தமிழ்நாட்டில் பலருக்கு 2023ஆம் ஆண்டின் கடந்த சில வாரங்கள் மிகவும் கடினமானவையாக இருந்தன. கனமழை காரணமாக நமது பல சக குடிமக்களை நாம் இழக்க வேண்டியிருந்தது. சொத்துக்கள், உடமைகள் இழப்பும் கணிசமானவையாக இருந்தன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை எனக்குள்ளே மிகவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த நெருக்கடியான வேளையில், மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு துணையாக நிற்கின்றது. சாத்தியமான அனைத்து ஆதரவையும் மாநில அரசாங்கத்திற்கு நாங்கள் அளித்து வருகின்றோம். சில நாட்கள் முன்பாக நாம் விஜயகாந்த்தை இழந்திருக்கின்றோம். அவர் சினிமாவுலகின் கேப்டன் மட்டுமல்ல, அரசியலிலுமே அவர் கேப்டனாக இருந்து வந்திருக்கிறார்.
திரைப்படங்களில் அவருடைய செயல்பாடு காரணமாக, அதன் வாயிலாக அவர் மக்களின் இதயங்களை கொள்ளைகொண்டு இருக்கிறார். ஒரு அரசியல்வாதி என்ற முறையிலேயே, அவர் அனைத்திற்கும் மேலாக தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்து வந்திருக்கிறார். அவருக்கு நான் என்னுடைய அஞ்சலிகளை காணிக்கையாக்குகிறேன். அவருடைய குடும்பத்துக்கும், அபிமானிகளுக்கும் நான் என் ஆழமான இரங்கலை உரித்தாக்குகிறேன்.
இன்று நான் இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் வேளையில், தமிழ் மண்ணின் மைந்தன் முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதனையும் நினைவு கூர்கிறேன். நமது நாட்டின் உணவு பாதுகாப்பிற்காக முக்கிய பங்களிப்பை அவர் அளித்தார். கடந்த ஆண்டில் அவரையும் நாம் இழந்துள்ளோம்.
சுதந்திரத்தின் அமுத காலம், அதாவது வரவிருக்கும் இருபத்தைந்து ஆண்டு கால கட்டத்தில் பாரதத்தை வளர்ந்த தேசமாக நாம் ஆக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த பாரதம் என்று கூறும்போது, இதில் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் என்ற இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. பாரத நாட்டின் வளம் மற்றும் கலாச்சார மரபின் பிரதிபலிப்புதான் தமிழ்நாடு.
தமிழ்நாட்டின் வசம் தமிழ்மொழி மற்றும் ஞானம் என்ற பழமையான கருவூலம் இருக்கிறது. புனிதர் திருவள்ளுவர் தொடங்கி, சுப்பிரமணிய பாரதி வரை பலர் அற்புதமான இலக்கியங்களை படைத்துள்ளனர். சி.வி. ராமன் தொடங்கி, இன்று வரை அற்புதமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சொந்தக்காரர்கள் பலரை இந்த மண் உருவாக்கி அளித்துள்ளது. நான் எப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் ஒரு புதிய சக்தியை நிரப்பிக் கொண்டு செல்கிறேன்.
திருச்சி நகரம் என்று சொன்னாலே, வளமான வரலாற்றுக்கான சான்றுகள் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் கொட்டிக் கிடக்கின்றது. இங்கு பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் போன்ற பல்வேறு அரச வம்சங்களின் நல்லாட்சி மாதிரிகள் கண்கூடாக காண கிடைக்கின்றன. எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு. அவர்களிடத்திலே எனக்கு மிக நெருக்கமான உறவுகள் உண்டு. இவர்களிடமிருந்து தமிழ் கலாச்சாரம் பற்றி வெகுவாக கற்கக்கூடிய நல்வாய்ப்பும் எனக்கு கிட்டி இருக்கிறது.
உலகின் எந்த இடத்துக்கு நான் சென்றாலும் கூட தமிழ்நாட்டைப் பற்றி பேசாமல், தமிழ் மொழியை மனதார புகழாமல் என்னால் இருக்க முடிவதில்லை. நண்பர்களே, தேசத்தின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தில் தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் கலாச்சார உத்வேகம் தொடர்ந்து விரிவாக வேண்டும், பரவ வேண்டும் என்பதே என்னுடைய முயற்சியாக இருக்கிறது.
டெல்லியின் நாடாளுமன்ற புதிய கட்டடத்திலேயே புனிதமான செங்கோல் நிறுவப்பட்டிருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். தமிழ் பாரம்பரியமானது தேசத்துக்கு அளித்து இருக்கும் நல்லாளுகை மாதிரியிலிருந்து கருத்தாக்கம் பெரும் முயற்சியே இது. காசி தமிழ்ச் சங்கம், சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கம் போன்ற இயக்கங்களின் பொருளும் கூட இதுதான். இந்த இயக்கங்கள் தொடங்கப்பட்டதில் இருந்து, நாடு முழுவதிலும் தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் தொடர்பான உற்சாகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இன்று பாரதம் கட்டுமானம் மற்றும் சமூக கட்டமைப்பின் மீது இதுவரை காணாத முதலீடுகளை செய்துவருகிறது. இன்று பாரதம் உலகின் தலைசிறந்த ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. உலகின் ஒரு புதிய நம்பிக்கை தாரகையாக இன்று பாரதம் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. பெரிய பெரிய முதலீட்டாளர்கள் எல்லாம் இன்று பாரதத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இதன் நேரடி ஆதாயம் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் கிடைத்து வருகிறது. தமிழ்நாடு மேக் இன் இந்தியாவின் மிகப்பெரிய பிராண்ட் அம்பாசிடராக மாறிக் கொண்டிருக்கிறது.