திருச்சி: ‘தேடிக் கிடைக்கும் பொருளுக்கு எப்பொழுதும் தனி சக்தி உண்டு’ என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேபோல், பல்வேறு தடைகளுக்கு பிறகு கிடைக்கும் எதுவும், நம்முடைய வாழ்வில் தனி ஒரு அங்கத்தினை வகிக்கும். இப்படித்தான் தேடல், தேடல், தேடல் எனத் தேடி, கூடல், ஊடல் என எதற்கும் இடம் கொடுக்காமல் பயணித்த ரவிச்சந்திரன் என்பவர், இன்று மிகச்சிறந்த தொழில் முனைவோர் என்றால் நம்புவதற்கு சற்று கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், இதுதான் உண்மை.
அப்படி என்னதான் சாதித்தார் இந்த மனிதர்? என்ற கேள்விதான் நம்மை இப்போது சுவாரஸ்ய கடலுக்குள் நீந்த வைத்துக் கொண்டிருக்கும். இதே கடலில் நாமும் நீந்தியே, திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் உள்ள நொச்சியம் என்ற இடத்திற்குச் சென்றேன். கூகுள் மேப் என்ற ஒன்று வந்தாலும், டீ கடைக்காரருக்கு தெரியாதவர்களும் இல்லை; நிமிடத்திற்கு நிமிடம் டிஜிட்டல் உலகில் ஒரே நொடியில் செய்திகள் பரவினாலும், நமது ஊர் பெரியோர்களின் பேச்சிற்கு ஒப்பில்லை என்பதைப் போலத்தான் ரவிச்சந்திரனின் அடையாளமும் இருந்தது.
ஏனென்றால், எனக்கு ‘அதோ! அங்க தான் ரவி இருக்காரு..’ எனக் கூறினார், காய்கறி விற்கும் பாட்டி ஒருவர். பாட்டி காண்பித்த ஆள்காட்டி விரலை நோக்கியே, நாமும் நடந்தோம். ‘வாங்க வாங்க..’ என்ற முகப்பொலிவு கொண்ட சிரிப்புடன் வரவேற்ற ரவிச்சந்திரனிடம், அடுத்த கேள்வியை கேட்பதற்குள், “மொதல்ல நம்ம தயாரிப்ப பாருங்க.. அப்புறம் பேசுவோம்” எனக் கூறினார்.
‘என்னடா இது இப்படி ஒரு சஸ்பென்ஸா..!’ என்ற ஆச்சரியத்தோடு ஒவ்வொரு அறையாக பயணப்பட்டோம். “இது மாவாக்கும் இயந்திரம், இது பிளேட் தயாரிக்கும் இயந்திரம், இது கப் தயாரிக்கும் இயந்திரம், இவை அனைத்தும் நானே சொந்த முயற்சியில் உருவாக்கியவைகள் சார்” எனக் கூறிக்கொண்டே வந்தார்.
இப்படியான உருவாக்கங்களை கொடுத்தவர், இளங்கலை வேதியியலை ’வேண்டாம்’ என்று கூறிவிட்டு கண்டுபிடிப்பைத்தேடி நாடு நாடாக நாடோடியாக அலைந்தார் என்பதைக் கூறும்போது, அகன்று விரிந்த கண்கள் மட்டும் தான் நம்மிடம் இருந்தன. தொடர்ச்சியாக, “எப்படி சார் இந்த ஐடியா?” எனக் கேட்டோம். “லட்சியம் சார். என்றைக்காவது அடைவது நிச்சயம்னு இறங்கினேன். இன்று அந்த லட்சியத்தை 59 வயதில் அடைந்துவிட்டேன்” என சிரித்தபடியே கூறினார்.