தமிழ்நாடு

tamil nadu

அணை கட்ட வலியுறுத்தி காமராஜர் சிலையிடம் மனு

By

Published : Jul 15, 2019, 1:56 PM IST

திருச்சி: தமிழ்நாட்டு விவசாயிகளை காப்பாற்ற ராசி மணல் பகுதியில் அணை கட்டக் கோரி காமராஜர் சிலையிடம், தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் மனு அளித்தார்.

பூ.விஸ்வநாதன்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 117வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்குக் காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ராசி மணலில் புதிய அணை கட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி காமராஜர் சிலையிடம் விசுவநாதன் மனு அளித்தார்.

காமராஜர் சிலையிடம் மனு

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " ராசி மணல் எனும் இடத்தில் தமிழ்நாடு விவசாயிகளைக் காப்பாற்றும் வகையில் அணை கட்ட முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டு முதலமைச்சராக காமராஜர் இருந்தபோது தான் 90 சதவீத அணைகள் கட்டப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வாய்க்கால்கள் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தான் வெட்டப்பட்டன. அதேபோல் தொழிற்சாலைகள், பெல், லால்குடி சர்க்கரை ஆலை உள்ளிட்ட நிறுவனங்களையும் காமராஜர் தான் நிறுவினார். இந்த வகையில் தமிழ்நாட்டில் விவசாயத்தைக் காப்பாற்றும் வகையில் ராசி மணல் பகுதியில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காமராஜர் சிலையிடம் மனு அளிக்கப்பட்டது." எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details