மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட நபர்கள் மூன்று மாதங்களில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம் திருச்சி: முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர், சத்திரம் பேருந்து நிலையம், மேல சிந்தாமணி பகுதியிலுள்ள அண்ணா சிலைக்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் நேரு கூறும் போது, இன்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் நானும் இணைந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மகளிர்களுக்கு வழங்க உள்ளோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:மகளிர் உரிமைத் தொகை திட்டம்; காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்!
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்ட நபர்களுக்கு உதவித்தொகை பெறுவது எப்படி என்ற செய்தியாளர் கேள்விக்கு, மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட நபர்கள், இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்களா என பார்த்து, மூன்று மாதங்களில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம் என அமைச்சர் நேரு கூறினார்.
இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கலந்து கொள்கிறார். அதே போன்று, சேலத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளோம். தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை குறித்த எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த அமைச்சர் நேரு, இந்த நேரத்தில் இதைப்பற்றி பேச வேண்டாம் என தெரிவித்தார்.
மயிலாடுதுறை, சீர்காழியிலுள்ள சட்டநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளீர்கள் என்ன வேண்டுதல் என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.
இதையும் படிங்க:வெண்டைக்காயை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்.. காவல்துறை மற்றும் விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு..