திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த போடுவார்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் சம்பத் மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்துவருகிறார்.
இவரும் பழையக் கோட்டையைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகள் ராதிகாவும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்துவந்துள்ளனர். இருவரும் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் இவர்களின் திருமணத்திற்கு சம்பத் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் சம்பத்-ராதிகா இருவரும் ஆக. 19ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி திருமணஞ்சேரியில் உள்ள ஒரு கோயிலில் தனது நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து, இருவரும் நேற்று (ஆக. 21) மதியம் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்புக் கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த புதுமணத்தம்பதி இது குறித்து தகவலறிந்த இரு கிராம மக்களும் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பத்-ராதிகா இருவரையும் பிரித்துச் செல்ல திடீரென ஒன்று கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்து காதலர்கள் இருவரையும் காவல் துறையினர் அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: கரோனாவின் மத்தியில் இணைந்த காதல் மனங்கள் - உக்ரைனில் புதுமையான முறையில் திருமணம்!