திருச்சி:பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர் தலைமையில், திருச்சியில் உள்ள காஜாமலையில் இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (டிச.28) நடைபெற்றது.
இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அனைத்து பொறுப்பாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தற்கால அரசியல் சூழ்நிலைகள், வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான கட்சியின் நிலைப்பாடு போன்ற முக்கிய கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டன.
இதன் பின்னர் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று இயற்கை எய்தினார். அவருடைய இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, மீண்டும் மோடி பிரதமர் ஆவார். பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளை ஒதுக்குவதாக உறுதி அளித்துள்ளனர். இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் திருச்சியில் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. மாநாடு தேதி பின்னர் அறிவிக்கப்படும். மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: தமிழகத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அனைத்து வகையிலும் உதவிட வேண்டும். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த தார்சாலைகள், கட்டிடங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
கச்சத்தீவை உடனடியாக பிரதமர் தலைமையிலான மத்திய அரசு மீட்டு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீர் வராததால், விவசாய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:4 ஆண்டுகளுக்குப் பின் துவங்கிய சென்னை - ஜித்தா விமான சேவை..! உம்ரா பயணிகள் மகிழ்ச்சி..!